Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, November 26, 2013

கழிவு மேலாண்மை கருத்தரங்கம்

   எம்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் கழிவு மேலாண்மை கருத்தரங்கு கடந்த 22.11.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

    இக்கருத்தரங்கில் பள்ளி தலைமையாசிரியர் செய்யது அகமது தலைமை வகித்து, கழிவு மேலாண்மை குறித்து விரிவாக உரையாற்றினர். தூத்துக்குடி தேசிய மாணவர் படை சார்பில் திரு. ஹவில்தார் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

      நிகழ்ச்சியின் நிறைவாக எம்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ஷேக் பீர்முகம்மது காமில் நன்றி கூறினார்.

   இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் முகம்மது சித்தீக், ஆனந்தக்கூத்தன், பரமசிவன், ஞானியார் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

Monday, November 25, 2013

ஸ்பிக் டிராபி 2013 : எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடம்.

 
பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற 8-வது ஆண்டு ஸ்பிக் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும், பழையகாயல் - புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடிய போட்டி நேற்று (23/11) ஸ்பிக் பள்ளி மைதானத்தில் மதியம் 2:30 மணியளவில் நடைபெற்றது.

டாஸில் வெற்றிபெற்ற எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை பெற்றிருந்தது. அந்த அணிக்காக அஸார் அதிகபட்சமாக 27 ரன்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த பழையகாயல் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 94 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணிக்காக அஸாருத்தீன் 49 ரன்களை சேர்த்திருந்தார்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் திரு. N.R.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பையையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.


 இப்போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் B.A.முஹம்மது அஸாருத்தீனும், சிறந்த பேட்ஸ்மேனாக பழையகாயல் புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளியின் அஸாருத்தீனும் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.


 நான்காம் இடம் பிடித்த தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூபாய் 1000-மும், கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூபாய் 2000-மும் கோப்பையும் வழங்கப்பட்டது.


இரண்டாமிடம் பிடித்த எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூபாய் 5000-மும் சுழற் கேடயமும், நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.


முதலிடம் பிடித்த பழையகாயல் புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூபாய் 10,000-மும், சுழற் கேடயமும், நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.

 தகவல் : ஜஹாங்கீர் (பயிற்சியாளர்)

Wednesday, November 20, 2013

ஸ்பிக் டிராபி கிரிக்கெட் போட்டி : இறுதிப் போட்டிக்கு தகுதி!


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான 8-வது ஸ்பிக் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் ஸ்பிக், சாதர் சாகன் மற்றும் ஹெவி வாட்டர் பிளான்ட் மைதானங்களில் நாக்கவுட் முறையில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் மாவட்டம் முழுதிலுமிருந்தும் 34 அணிகள் பங்கேற்றன. இதில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தான் சந்தித்த முதல் போட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளி - பசுவந்தனை அணியை சந்தித்தது.
 
முதலில் பேட்டிங் செய்த எல்.கே.பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 21 ரன்களும், ஜியாவுத்தீன் 23 ரன்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த பசுவந்தனை அணி 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. எல்.கே.பள்ளி அணிக்காக அஸாருத்தீன் 4 விக்கெட்டுகளையும், சரவணன் 3 விக்கெட்டுகளையும், ஜியாவுத்தீன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் ஜியாவுத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.

எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தனது இரண்டாவது போட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி - சவலப்பேரி அணியுடன் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை பெற்றனர். அந்த அணிக்காக இஜாஸ் 49 ரன்களையும், அல்தாஃப் 26 ரன்களையும் அடித்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த சவலப்பேரி அணியினர்  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனர். எல்.கே.பள்ளி அணிக்காக ஜியாவுத்தீன் 3 விக்கெட்டுகளையும், பவனேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  ஆட்டநாயகனாக எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் இஜாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது போட்டியில் பலம் வாய்ந்த விளாத்திக்குளம் அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக ஜியாவுத்தீன் 40 ரன்களையும், அபுல்ஹஸன் 25 ரன்களையும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த விளாத்திக்குளம் அணியினர் 16.1 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. எல்.கே.பள்ளி அணிக்காக அஸாருத்தீன் 3 விக்கெட்டுகளையும், ஜியாவுத்தீன் மற்றும் அல்தாஃப் தலா 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.  ஆட்டநாயகனாக எல்.கே.பள்ளி அணியின் ஜியாவுத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.

கால் இறுதிப் போட்டியில் கமலாவதி மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 36 ரன்களை அடித்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த கமலாவதி அணியினர்  16.1 ஓவர்களில் 37 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர். எல்.கே.பள்ளி அணிக்காக அல்தாஃப் 3 விக்கெட்டுகளையும், அஸாருத்தீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே.பள்ளி அணியின் அல்தாஃப் தேர்வு செய்யப்பட்டார்.

அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட குளத்தூர் அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணிக்காக அஸாருத்தீன் அதிரடியாக விளையாடி 29 ரன்களையும், அல்தாஃப் 18 ரன்களையும் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய குளத்தூர் அணி 17.4 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியடைந்தது. எல்.கே.பள்ளி அணிக்காக அம்மார் 4 ஓவர்கள் வீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரவணன் 3 விக்கெட்டுகளையும், ஜியாவுத்தீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஆட்டநாயகனாக எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியின் அம்மார் தேர்வு செய்யப்பட்டார்.
 
இவ்வெற்றியை அடுத்து எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வருகின்ற 23-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இறுதிப் போட்டியில் புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளி - பழையகாயல் அணியினருடன் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினர் விளையாட உள்ளார்கள்.

தகவல் : ஜஹாங்கீர் (பயிற்சியாளர்)