Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Sunday, October 18, 2015

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்று, மாநில அளவில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி சீனியர் அணி தகுதி!

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் விளையாட, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், வட்டார - மாவட்ட - மண்டல - மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

வட்டார அளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும் நடைபெற்ற போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட சீனியர் அணி, 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் அணி ஆகியன வெற்றிபெற்று, மண்டல அளவில் விளையாடத் தகுதி பெற்றது. மண்டல அளவிலான போட்டி, 16.10.2015 வெள்ளிக்கிழமையன்று காலையில் நடைபெற்றது.

சீனியர் பிரிவு போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியுடன் மோதிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.



அன்று மாலையில் நடைபெற்ற சூப்பர் சீனியர் பிரிவிற்கான போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியுடன் மோதிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தது.

நன்றி : காயல்பட்டணம்.காம்

Saturday, October 3, 2015

தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்!

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்த 2014-15 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த 85 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 26.09.2015 சனிக்கிழமையன்று, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், வாழ்த்துரையாற்றியதோடு, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.






பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, பள்ளிப் பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.





இந்நிகழ்ச்சியின்போது, மொத்தமுள்ள 105 மாணவர்களுள் முதற்கட்டமாக 085 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : காயல்பட்டணம்.காம்

ஸ்டெர்லைட் காப்பர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2015: L.K. மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது!



தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கமும், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடத்தியது.

இப்போட்டியில் 27 அணிகள் பங்குபெற்றன. நாக்கவுட் முறையில், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டாரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவில் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கோவில்பட்டி வட்டாரத்தில் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும், விளாத்திக்குளம் வட்டாரத்தில் அரசுமேல்நிலைப் பள்ளி அணியும், தூத்துக்குடி வட்டாரத்தில் காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும், திருச்செந்தூர் வட்டாரத்தில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

இந்த அணிகளிடையே அரையிறுதிப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியின் முடிவில், எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலில் பேட்டிங் செய்தது, அந்த அணியினர் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியினர் 9 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை எட்டி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான திரு. அல்பர்ட் முரளீதரன் தலைமை தாங்கினார், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் கூடுதல் துணைத் தலைவர் தனவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.

வெற்றிபெற்ற எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றிக்கு முனைந்த விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு, கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த போட்டித் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியின் தமிழரசுவும், சிறந்த பந்து வீச்சாளராக எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் பாசித் என்ற மாணவனும், போட்டித் தொடரின் சிறந்த வீரராக தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியின் இமானுவேல் என்ற வீரரும் தேர்வு செய்யப்பட்டு, கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தகவல்:
எம்.ஜஹாங்கிர்