Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

About us

பள்ளியின் வரலாறு :

இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் காயல் பட்டணத்தின் மக்கள், அறிவாற்றலிலும் ஒழுக்கப் பண்புகளிலும் சிறந்தோங்க வேண்டுமென்பது அல்ஹாஜ் எல்.கே. லெப்பைத்தம்பி அவர்களின் லட்சியமாக இருந்து வந்தது.

1927-ம் ஆண்டின் துவக்கத்தில் அரசின் அங்கீகாரம் பெற்று அல்ஹாஜ் N.T.H. அப்துல் ஹை ஆலிம் அவர்கள் ஒரு பள்ளியை நடத்தி வந்தார்கள்.

பொருளாதார வசதி குறைவால் அவர்களுக்கு இப்பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால் 1943-ல் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஜனநாயக சபையிடம் இப்பள்ளியை ஒப்படைத்தார்கள்.

இப்பள்ளியை மிகச்சிறப்பாகவும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து நடத்துவதற்கு ஹாஜி எல்.கே. லெப்பைத்தம்பி அவர்களே பொருத்தமானவர் என கருதி ஜனநாயக சபை 1944-ல் எல்.கே. அவர்களிடம் முறைப்படி ஒப்படைத்தது.

அன்று சுமார் 45 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றினர். அக்காலத்தில் அரசு மானியம் பாடசாலைக்கு ஆறு மாதத்திற்கொரு முறையே வரும். ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிட வாய்ப்பில்லை.

அல்ஹாஜ் எல்.கே. லெப்பைத்தம்பி அவர்களும் மற்றும் அவர்கள் சகோதரர்களும் தங்களது வர்த்தக ஸ்தலங்களுக்குச் சென்று விடுவதால், இக்காஹிராப் பள்ளியை சீருடன் நடத்திட வேண்டும் என்ற நன்நோக்கம் கொண்ட எல்.கே. அவர்கள், தங்கள் சார்பில் இப்பாடசாலையைத் திறம்பட நடத்திட ஜனாப் M.K.A. மூஸா ஸாஹிப் ஆலிம் அவர்களை நிர்வாகியாக நியமித்து, ஆசிரியர்களுக்கு அரசு மானியத்தை எதிர்பார்க்காமலே மாதாமாதம் ஊதியம் வழங்கிட தமது சொந்தப் பணத்தை அனுப்பி வைத்து கல்வித் தொண்டாற்றினார்கள். இதன்மூலம் ஆசிரியர்கள் ஊக்கத்துடன் நன்முறையில் கற்பித்து பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகமாக்கினர்.

1946-ஆம் ஆண்டிலிருந்துதான் ஹாஜி எல்.கே. லெப்பைத்தம்பி அவர்கள் காஹிராப் பள்ளியை தங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். அவ்வாண்டிலேயே வண்ணாக்குடி கடைத்தெரு என்று அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த தெருவில் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை பள்ளி நடத்துவதற்கேற்ற முறையில் திருத்தி அமைத்து பாடசாலை புதுமெருகுடன் நடைபெறச் செய்தார்கள். அவர்களின் அயரா உழைப்பு, நிர்வாகத்திறன் இவற்றால் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயரலாயிற்று. அதற்கேற்ப பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்ககையும் உயர்ந்தது. காஹிராப் பள்ளி ஒரு பெரிய தொடக்கப்பள்ளியாக மாறியது.

1946-ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையை எல்.கே. அவர்கள் நேரிடை நிர்வாகத்தின் கீழ் எடுத்து நடத்தினாலும், 1950-ஆம் ஆண்டில்தான் தமிழக அரசின் ஆணைக்கிணங்க இப்பள்ளி ‘எல்.கே. தொடக்கப்பள்ளி’ என்று பெயர் மாற்றம் செய்து பதிவும் செய்யப்பட்டது.

கல்விப் பணியில் ஆர்வமிகக் கொண்ட கல்வித்தந்தை ஹாஜி. எல்.கே. அவர்கள் 1955-ஆம் ஆண்டு முதல். எல்.கே.தொடக்கப்பள்ளியை ஒரு நடுநிலைப் பள்ளியாக உயர்த்திட தமிழக அரசிடம் மனுச்செய்து அனுமதி பெற்றார்கள். பாடசாலை 1 முதல் 8 வகுப்புகளுடன் திறமையாக செயல்பட்டது. அக்காலத்தில் எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு (ESLC) நடைபெறும். 

எல்.கே. நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எல்.கே. அவர்களின் நேரடி கண்காணிப்பாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பாலும் மிகச்சிறந்த தேர்ச்சிவிழுக்காடு பெற்று பாடசாலைக்குப் பெரும் புகழ் சேர்த்தார்கள்.
மேலும் நம்மக்கள் கல்விஅறிவில் உயர்ந்திட வேண்டும், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற உயர்கல்வி கற்ற மக்கள் காயல்பட்டணத்தில் உருவாக வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட எல்.கே. அவர்கள், இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக (High School) உயர்த்திட உறுதி பூண்டார்கள். மதிப்பிற்குரிய காமராசர் அவர்கள் மாநில முதலமைச்சராக பணியாற்றிய போது “ஊருக்கொரு உயர்நிலைப் பள்ளி அமைப்போம்” என்று பிரகடனப்படுத்தினார்கள். இதனைப் பயன்படுத்தி எல்.கே. அவர்கள் இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட அரசிடம் விண்ணப்பித்தார்கள். அதன் மூலம் 1962-ம் ஆண்டு முதல் எல்.கே. நடுநிலைப்பள்ளி , எல்.கே. உயர்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது.

இப்பள்ளியை நிர்வகிப்பதற்காக "எல்.கே.எஸ். ஜூவல்லர்ஸ் எஜுகேசன் டிரஸ்ட்" அமைக்கப்பட்டது. ஹாஜி எல்.கே. லெப்பைத் தம்பி அவர்கள் தலைவராகவும், ஜனாப் S.A. சுலைமான் M.A. அவர்கள் செயலாளராகவும் பணி செய்தார்கள். இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்த புதிதில் ஓர் ஆண்டு காலமாக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவில்லை. மனம் தளராத எல்.கே. அவர்கள் ஆசிரியர் அனைவருக்கும் தமது சொந்தப் பணத்திலிருந்து ஊதியம் வழங்கி 'கல்வித் தந்தை' என்று புகழ் பெற்றார்கள். உயர்நிலைப் பள்ளி இப்பொழுது நடைபெறும் கட்டிடத்தில் சகல வசதிகளுடன் நடைபெறலாயிற்று. எல்.கே. உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புகளுடனும், எல்.கே.தொடக்கப்பள்ளி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகளுடன் தனித்தனியே இயங்கலாயிற்று.

எல்.கே. தொடக்கப்பள்ளிக்கென தனிக்கட்டிடம் கட்டும் முயற்சியில் எல்.கே. அவர்கள் ஈடுபட்டபோது அவர்களுடன் நல்மனம் கொண்டவர்களாக ஜனாப். எஸ்.ஓ. ஹபீப் முஹம்மது ஹாஜி அவர்களும், புதுக்கடைத்தெரு மு.க.ச.த. அஹமது மீரா லெப்பை அவர்களும் சேர்ந்து நன்கொடையாக அளித்த நிலத்தில் P.S.K.V. குடும்பமும், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த நளீம்ஹாஜி அவர்களின் நிதியுதவியைப் பெற்று எல்.கே. அவர்கள் ஓர் அழகிய மாடிக் கட்டிடத்தைக் கட்டினார்கள். அதற்கு ‘நளீம் ஹாஜி கட்டிடம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கட்டிடம் ஹாஜி. பி.எஸ். ஹபீப் முகம்மது அவர்களால் 12.10.1969-ல் திறந்து வைக்கப்பட்டது. ஹாஜி.P.S.அப்துல் காதர் அவர்களும் இக்கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் மாணவர்கள் கல்வி மேம்பாடு அடைவதற்கும் பெரிதும் உதவியாக இருந்தார்கள். இவ்வழகிய கட்டிடத்தில் எல்.கே. தொடக்கப்பள்ளி தனித்து இயங்கலாயிற்று. தமிழக அரசின் கல்வித்திட்டம் மாற்றப்பட்டு மேனிலைப் பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எல்.கே. அவர்கள் எல்.கே. உயர்நிலைப் பள்ளியையும் மேனிலைப் பள்ளியாக மாற்றிட முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆணையைப் பெற்று எல்.கே. உயர் நிலைப்பள்ளி, எல்.கே. மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. எல்.கே. அவர்களின் கனவு நனவாகியது.
இன்று எம்பள்ளியில் கற்று வெளியேறிய மாணவர்கள் பட்டதாரிகளாகவும், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும், பணியாற்றி வருவதுடன், கற்றறிந்த சிறந்த வணிகர்களாகவும் உலகெங்கும் பரவி நிற்கிறார்கள்.

காயல்மாநகரின் கண்மணியும், கல்வித் தந்தையுமான L.K அவர்கள் தங்களின் வயோதிகத்தின் காரணமாக முன்போல் செயல்பட முடியாதென்றெண்ணி, தங்களது நம்பிக்கைக்குரிய நண்பர்களிடையே ஆலோசித்து அல்ஹாஜ்.A.K.செய்யது அகமது அவர்களைத் தாளாளராகக் கொண்டு ஒரு புதிய கமிட்டி அமைத்து எல்.கே. பள்ளிகளின் சேவை தொய்வின்றித் தொடரசெய்தார்கள். காலப்போக்கில் அல்ஹாஜ்.S.O. அவர்கள் காலஞ்சென்றபின் L.K. அவர்களின் சகோதரர் காயல் காந்தி அல்ஹாஜ்.L.K.சேகு முகம்மது அவர்கள் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வந்தது. எல்.கே. மேனிலைப் பள்ளிக்கு அல்ஹாஜ் ஏ.கே. செய்யதுஅகமது அவர்களும், எல்.கே. தொடக்கப்பள்ளிக்கு எல்.கே. அவர்களுடன் ஏற்கனவே தொடர்ந்து கல்விப் பணிக்கு உதவி செய்து வந்த நாவலர் ஹாஜி எல்.எஸ். இபுறாகிம் அவர்களும் நிர்வாகிகளாயிருந்து பணியாற்றி வந்தார்கள். இவர்களது காலத்தில் எல்.கே மேனிலைப் பள்ளிக்கென எல்.கே.லெப்பைத் தம்பிச் சாலையில் ஓர் ஆய்வுக்கூடம் (Laboratory) கட்டப்பட்டதுடன் சில கடைகளும் கட்டி பள்ளிக்கூடத்திற்கு வருமானம் கிடைத்திட வகை செய்தார்கள். எல்.கே.லெப்பைத்தம்பிச் சாலையில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூட நிலத்தை P.S.K.V. குடும்பத்தைச் சேர்ந்த அல்ஹாஜ்.தைக்கா முகம்மது சாலிஹ் அவர்களும், K.செய்து இஸ்மாயில் அவர்கள் மனைவி பீவி பாத்தும்மா ஆகியோர் நன்கொடையாக அளித்தனர். அதன் பின் மரைக்கார் பள்ளித்தெரு அல்ஹாஜ் கே.எம். இஸ்மத் B.Sc., அவர்கள் எல்.கே. மேனிலைப் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றினார்கள்.

எல்.கே. பள்ளிகளின் நிர்வாகிகளின் திறமையாலும், தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரிய, அலுவலகப் பெருமக்களின் உழைப்பாலும் பாடசாலை வளர்ச்சி பெற்று மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. கனம் ஏ.கே. செய்தஹமது ஹாஜியின் வயோதிக நிலையின் காரணமாக பாடசாலைகளின் நிர்வாகத்தை விட்டு விலகினார்கள். அதன்பின் பள்ளியின் நிறுவனர் காலஞ்சென்ற எல்.கே. அவர்களின் மகனார் ஜனாப்.எல்.கனி அவர்கள் தலைவர் பொறுப்பை ஏற்றார்கள். துணைத்தலைவராக ஹாஜி S. அக்பர்ஷா B.A., அவர்களும், செயலாளராக ஜனாப்.பி. மஹ்மூது ஹாஜி அவர்களும் பதவி ஏற்றார்கள். இவர்களின் விடாமுயற்சியாலும், திறமையான நிர்வாகத்தாலும், பள்ளி மேலும் வளர்ச்சியடைந்து வந்தது. எல்.கே.லெப்பைத் தம்பிச் சாலையில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடதின் மாடியில் மேலும் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டன. பள்ளியின் வருவாய்க்கென கூடுதலாக 4 கடைகளும் கட்டப்பட்டன. அத்துடன் புதிதாக கம்ப்யூட்டர் படிப்புப் பிரிவு (Computer Science) ஏற்படுத்தப்பட்டதால் அதற்கென தனியாக, ‘பி.மஹ்மூது ஷஃபீக் கம்ப்யூட்டர் பிளாக்’ என்ற பெயரில் செயலாளர் ஜனாப். பி. மஹ்மூது ஹாஜி குடும்பத்தினரின் பொருளுதவியைக் கொண்டு ஆய்வுக்கூட வளாகத்திலேயே கட்டப்பட்டு, பொன்விழா ஆண்டு கொண்டாட்டதின் பொது திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

எம்பள்ளிகளின் தலைவர் ஜனாப்.எல்.கனி அவர்களும், மற்ற நிர்வாகிகளும் பள்ளியின் உயர்வுக்கும், மாணவர் தம் கல்வி வளர்ச்சிக்கும், அதிக அக்கறை எடுத்து உழைத்து வந்தார்கள். பள்ளி நிறுவனர் காலஞ்ச்சென்ற எல்.கே. அவர்களைப் போல் தினமும் பள்ளிக்கு வந்து அரிய ஆலோசனைகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு வழங்கி பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார்கள்.

மேலும் எல்.கே. மேனிலைப்பள்ளி தனித்தனியாக இருவேறு கட்டிடத்தில் இயங்கி வந்ததால் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளால் நேரிடை கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்த்திட, எம்பள்ளி உதவித்தலைவர், எல்.கே.எஸ். கோல்டுஹவுஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.அக்பர்ஷா B.A., & சகோதரர்கள் எல்.கே. லெப்பைத் தம்பிச் சாலையிலுள்ள பள்ளி கட்டிட வளாகத்தில் பல லட்ச ரூபாய் செலவில் பத்து வகுப்பு அறைகள் கொண்ட அழகு மிளிரும் கட்டிடத்தை தங்கள் தந்தை S.A. சுலைமான் M.A., அவர்களின் பெயரில் கட்டித் தந்துள்ளார்கள்.

எல்.கே. மேனிலைப் பள்ளியின் அனைத்து வகுப்புகளும் அக்கட்டிடத்தில் இயங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்டிடம் 1999-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தின்போது திறந்து வைக்கப்பட்டது. இம்மாபெரும் பணியை செய்துதந்த அல்ஹாஜ் S.அக்பர்ஷா சகோதரர்களை பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்.

எல்.கே.அவர்கள் இந்நகர மக்களுக்குக் கல்விக்கண் திறந்திட தமது செல்வத்தைச் செலவு செய்தது போன்றே, அவர்களின் குடும்பத்தாரும் மற்றும் நிர்வாகத்தினரும் இவ்வரிய கல்வி அறப்பணியை செய்து வருகின்றனர்.

1945-ம் ஆண்டு ஒரு தொடக்கப்பள்ளியாய் இருந்த இப்பள்ளி பொன்விழா ஆண்டில் எல்.கே. மேனிலைப்பள்ளி, எல்.கே. தொடக்கப் பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேசன் பள்ளி என ஆல் போல் விரிந்து இந்நகர மக்களுக்குக் கல்விப்பணியாற்றி வருகின்றன. இன்று இப்பள்ளிகளில் 2000 மாணவ-மாணவியர்களும் பயில்கின்றனர். 80 ஆசிரியர்களும், 8 அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அழிக்க முடியாத கல்விப் பணியை கல்வித்தந்தை எல்.கே.லெப்பைத்தம்பி அவர்களுடன் தோளோடு தோள் நின்று துணையாக இருந்தவர்களுள் நாவலர். என்.டி.அமீர் சுல்தான், வள்ளல் அ.க.அப்துல் காதிர், பி.எஸ்.எம்.சுலைமான், எல்.எம்.எஸ்.சகோதரர்கள், எஸ்.எம்.அப்துல் காதிர் சாளை சாலிஹ் ஹாஜி, ஏ.கே.சாகுல்ஹமீது, எம்.டி.எஸ்.செய்து தம்பி, எம்.எஸ்.அப்துல் ஜப்பார், எஸ்.எம்.சிஹாபுத்தீன், சாலை முகம்மது அப்துல் காதர், Er.A.K. செய்கு, கத்தீபு சலீம் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
எல்.கே.அவர்களின் புதல்வர் ஜனாப் L.கனி அவர்களின் மறைவு மற்றும் செயலர் ஹாஜி.B.மஹ்மூது அவர்களின் வயோதிக நிலமை இவற்றின் காரணமாக 2006 டிசம்பர் மாதம் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹாஜி.Dr.M.S.அஷ்ரப் அவர்கள் தலைவராகவும், ஹாஜி.S.அக்பர்ஷா B.A., அவர்கள் மற்றும் ஹாஜி.S.M.உசைர் அவர்கள் உதவித் தலைவர்களாகவும், ஹாஜி.Dr.S.L.முஹம்மது லெப்பை செயலர் மற்றும் தாளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இக்குழுவின் சீரிய நிர்வாகத்தில் மேல்நிலை வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தனித்தனி ஆய்வுக்கூடம் (Physics Lab, Chemistry Lab, Biology Lab) ELKAY '84 மாணவர்களின் உதவியோடு செய்து முடிக்கப்பட்டது. மேலும் நிர்வாக அறையானது Tiles ஒட்டப்பட்டு Bathroom வசதியோடு புதிப்பிக்கப்பட்டது. அதேபோல் தலைமை ஆசிரியரின் அறையும் ஹாஜி.S.அக்பர்ஷா B.A., அவர்கள் வழங்கிய நிதியோடு புதிப்பிக்கப்பட்டது.
தற்காலத்தில் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் உள்ளதால் ஏற்கனவே உள்ள ஆங்கில வழி வகுப்புகளுடன் மாணவர்கள் தேவையைக் கருதி பெற்றோரின் வேண்டுகோளுக்கு ஏற்ப Excess ஆங்கில வழி வகுப்புகள் (Self Finance) 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 2011-12 ல் 9-ஆம் வகுப்பு வரை இது செயல்பட்டுக்கொண்டுவருகிறது. பள்ளிக்கு நீண்ட நாள் தேவையாக ஒரு கலையரங்கம் இருந்தது. இதனை தலைவர் DR.M.S.அஷ்ரப் குடும்பத்தார் அவர்களின் தந்தையின் நினைவாக "ஹாஜி.S.A.மீரா சாகிபு நினைவு அரங்கம்" என்ற பெயரில் ஒரு அரங்கத்தைக் கட்டித்தந்துள்ளார்கள். பள்ளியின் பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் படிப்பு சார்பாக ஊக்கப்பரிசாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெரும் மாணவர்களுக்கு தங்க மெடல் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. 2008-09 கல்வியாண்டில் S.S.L.C. பொதுத்தேர்வில் நம்பள்ளி மாணவர் A.H.அமானுல்லாஹ் 489/500 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றார். அதே மாணவர் +2 அரசுத்தேர்வில் 1177/1200 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். மேலும் மாணவர்கள் சகல வசதியுடன் கல்வி பயில அனைத்து வகுப்புகளுக்கும் மின் விசிறி (Fan) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி N.சிவா M.A., B.L., அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து லட்சம் பெற்று ஒரு வகுப்பறை கட்டப்பட்டு வருகிறது. இதே அறையில் மேலும் ஐந்து லட்சம் பெற்று கூடுதல் வகுப்பறை கட்டி தருவதாக திரு.திருச்சி. N.சிவா அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

கல்வித்தந்தை எல்.கே. அவர்களால் நிறுவப்பட்ட இப்பள்ளியானது இறையருளால் சீரிய கல்வி மற்றும் ஒழுக்கத்தினை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வரும் இப்பணி தொய்வின்றி தொடர பலர் உதவி செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கிட துவா செய்கிறோம்.